MCV NETWORK

Tamilnadu's Best Political Advocacy Group

புயலை கிளப்பி, புஸ்வானமான ஆன்மீக அரசியல்: ரஜினியின் அறிவிப்பால் யாருக்கு லாபம் ?

60 min read

கடந்த 25 ஆண்டுகளாக இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று தமிழக மக்களுக்கும், பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பூச்சாண்டி காட்டி வந்த நடிகர் ரஜினிகாந்த், 2017ம் ஆண்டு ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என்று துவங்கி, எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக விழாவில் எம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்கிற வீரவசனம் பேசியது வரை பரபரப்பை உண்டாக்கி, பல அரசியல் தலைவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தினார். 2017ம் ஆண்டு இருமுறை தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், அரசியலில் களம் இறங்குவதை உறுதி செய்தார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று வீரவசனங்கள் பேசி, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுத தொடங்கினார். அதன் பிறகு தனக்கென செல்வாக்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்திய சம்பவம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அவர் தெரிவித்த கருத்தால் வந்த விணை என்று தான் சொல்ல வேண்டும். துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் பார்க்க சென்ற ரஜினியை “நீங்கள் யார் ? சென்னையில் இருந்து இங்கு வர 100 நாட்கள் ஆகிவிட்டதா ?” என்று கேள்வி எழுப்பி ஒரு இளைஞர் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கினார். அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய செய்தியாளர் சந்திப்பில் கோபத்தை வெளிப்படுத்திய ரஜினியையும் தமிழகம் பார்க்கத் தவறவில்லை.

இந்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்கி, பிரச்சாரத்தை தொடங்குவார் என்று பலராலும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், திடீரென லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, “எழுச்சி வர வேண்டும். மக்கள் மத்தியில் எழுச்சி வந்த பிறகு நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார். அப்போது தான் முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்றும், இளைஞர் ஒருவரை முதல்வராக்கவும், இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க தாம் விரும்புவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அப்போதே அவருக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இப்படிப்பட்ட சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வர உள்ளார் என்றும், ரஜினியை அவர் சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. அமித்ஷாவும் வந்தார், சாலைகளில் நடந்து மக்களிடையே கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, அரசு விழாவில் அரசியல் பேசிவிட்டுச் சென்றார். இந்த மேடையில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக உறுதி செய்தது. ஆனால் அதிமுக உடனான கூட்டணி குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காத அமித்ஷா, இந்த அரசுக்கு பாஜக பாராங்கல் போல துணை நிற்கும் என்று சொல்லிவிட்டு, திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை கடுமையாக விமர்சித்துவிட்டுச் சென்றார். அன்று இரவு ரஜினியின் தரப்பில் இருந்து பெறப்பட்ட தகவல்களுடன் அமித்ஷாவை, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ரஜினிக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை என்பதை வெளிப்படையாக அவர் அமித்ஷாவிடம் தெரிவித்ததாகவும், அதேநேரம் தொடர்ந்து ரஜினியை கட்சித் தொடங்க வைக்க தாம் முயற்சித்து வருவதாகவும் குருமூர்த்தி பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிகழ்வுகள் ஒருபக்கம் இருக்க, ரஜினியின் உடல்நிலை குறித்த அறிக்கை ஒன்று வேகமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அந்த அறிக்கையை பொய் என்று கூறிய ரஜினி தரப்போ, அதில் கூறப்பட்டுள்ள உடல்நிலை குறித்த தகவல்கள் மட்டும் உண்மை என்று கூறியது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ள ரஜினிகாந்திற்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கொரோனா தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்ததாக அந்த அறிக்கை கூறியிருந்தது. இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள மருத்துவ தகவல்களை ரஜினி உறுதி செய்தது தமிழக அரசியல் வரலாற்றில் புதுமையானதாக இருந்தது. ஏனெனில், இதுவரை தமிழக முதல்வர்களாக இருந்த எந்த தலைவர்களும், தமிழக அரசியலில் பல்வேறு கட்சிகளை நடத்தி வரும் தலைவர்களும், தங்களுக்கு உள்ள நோய் குறித்த விபரங்கள் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. ஆனால் முதன்முறையாக கட்சி தொடங்குவதற்கு முன்பே ரஜினி இத்தகவல்களை வெளியிட்டது, மக்களிடையே ரஜினியின் மீதான மதிப்பை உயர்த்தியது. அதேநேரம், ரஜினி ஓய்வு எடுப்பதே சரியான முடிவாக இருக்கும் என்கிற எண்ணத்தையும் மக்களின் மத்தியில் அந்த அறிக்கை உண்டாக்கியிருந்தது.

அந்த அறிக்கை வெளிவந்த சில நாட்களிலேயே மீண்டும் தனது மன்ற நிர்வாகிகளுடன் பேசிய ரஜினிகாந்த், டிசம்பர் 3ம் தேதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜனவரியில் கட்சி துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு என்று கூறியதோடு, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்றும் கூறியிருந்தார். அன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கொரோனா காலத்தில் மக்களை சந்திக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுருத்தி உள்ளார்கள். ஆனால் தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும், நான் சந்தோஷம் தான் கொள்வேன். தற்போதைய சூழலில் ஒரு அரசியல் மாற்றம் கட்டாயம் தேவை” என்று கூறியிருந்தார். மேலும் தான் தொடங்க உள்ள கட்சியின் மேற்பார்வையாளராக காந்தியவாதியான தமிழருவி மணியனையும், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக தொழிலதிபர் அர்ஜூன மூர்த்தியையும் ரஜினி அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் நேற்று தாம் நேரடியாக அரசியல் களத்திற்கு வரவில்லை என்றும், தனது உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால், அரசியல் கட்சி தொடங்கும் எண்ணத்தை தான் கைவிடுவதாகவும் ரஜினிகாந்த் அறிக்கை மூலமாக தெரிவித்தார். இது ஒரு தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். உடல்நிலையை ரஜினி கவனித்துக் கொண்டு, திரையில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்தாலே போதும் என்று பொதுமக்கள் பலரும் கருத்துக்களை முன்வைத்தனர். அதேநேரம், ரஜினி கட்சி தொடங்கப்போவது இல்லை என்று தான் அறிவித்துள்ளார், அரசியலில் அவர் 1996ம் ஆண்டு போல ஒரு கட்சிக்காக குரல் கொடுக்க வாய்ப்பு உள்ளது என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1996ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்தை அறிவித்து, தனித்து களமிறங்க காங்கிரஸ் தரப்பு முடிவெடுத்தது. அதற்காக முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அதற்கு ரஜினிகாந்த் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக காங்கிரஸ் தனித்து நின்றால், அக்கட்சிக்காக தான் நேரடியாக பிரச்சாரம் செய்வதாக ரஜினி உறுதியளித்திருந்தார். இதுபற்றி செய்தியாளர்களிடம் ஒருமுறை பேசிய நரசிம்ம ராவின் பேரன் சுபாஷ், “முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ரஜினியை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் விரும்பியது. ஆனால் அதற்கு ரஜினி ஒப்புக்கொள்ளவில்லை. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தொலைக்காட்சி மூலமாக தாமே நேரடியாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டு இருந்த போதே, அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். அதனால் ரஜினிகாந்திற்கு அதில் விருப்பம் இல்லையோ என்று நரசிம்ம ராவ் எண்ணினார். அதனைத் தொடர்ந்தே அதிமுக உடன் கூட்டணி அமைத்தது” என்று தெரிவித்திருந்தார்.

அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 1996ம் ஆண்டு அமைந்த போது, நரசிம்ம ராவின் பேனர்கள், போஸ்டர்களை காங்கிரஸ் உறுப்பினர்கள் கிழித்து, எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த கூட்டணியை எதிர்த்து ஜி.கே.மூப்பனார் தரப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் என்றொரு கட்சி உருவாக்கப்பட்டு, அக்கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்தது. இக்கூட்டணியை அமைக்க முக்கியப் பங்காற்றியவர் மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. அப்போது திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவாக எதுவும் பெரிதும் பேசாத ரஜினிகாந்த், “மீண்டும் ஜெயலலிதா தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால், இந்த தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தொலைக்காட்சி வாயிலாக பேசி, அக்கூட்டணிக்கு வலு சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே திமுக – தமாகா கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். அதற்கு ரஜினி தான் காரணம் என்று ஊடகங்கள் கட்டுரைகளை எழுதித்தள்ளின. ஆனால் அப்போது ஜெயலலிதா மீது இருந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும், தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற சுதாகரனின் பிரம்மாண்ட திருமணமும் தான் ஆட்சி மாற்றத்திற்கான முக்கியக் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ரஜினி பேச்சின் காரணமாக, ஏற்கனவே அதிமுக மீது அதிருப்தியில் இருந்த ரசிகர்கள், பொதுமக்கள், அதிமுகவை தவிற்த்துவிட்டு, திமுகவுக்கு வாக்களித்தார்கள். இதில் ரஜினிக்கு 10% பங்கு உண்டு எனில், 90% பங்கு ஜெயலலிதாவின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என்று சொல்லலாம்.

1996ம் ஆண்டை போல 2004ம் ஆண்டிலும் ரஜினி பேச்சை வைத்து, வாக்குகளை அள்ளிவிடலாம் என்கிற எண்ணத்தில் பாஜக – அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக அவரை பேச வைத்தார் அப்போதைய துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி. 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, “நான் தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு வாக்களிக்க உள்ளேன். அதற்காக என் ரசிகர்கள், மக்களை பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்க சொல்லமாட்டேன்” என்று மறைமுகமாக தனது ஆதரவை ரஜினி தெரிவித்திருந்தார். இதுகுறித்து செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டியளித்த மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி, “ரஜினி தெளிவாக தனது ரசிகர்களுக்கு தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார். அவர் பாஜகவுக்கு வாக்களிக்கின்றார் என்றால், அவரது ரசிகர்களும் பாஜகவுக்கு தான் வாக்களித்தாக வேண்டும். நிச்சயம் வாக்களிப்பார்கள். ஆனால் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் விரும்பினால், இன்னும் வெளிப்படையாக பாஜகவுக்கு தன் ஆதரவை அவர் தெரிவிக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டார்” என்று தெரிவித்திருந்தார். மேலும் அதே செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில், “ரஜினி ஒரு ஆன்மீகவாதி. இந்து மத நம்பிக்கைகள் மீது பற்றுக் கொண்டவர். ஆனால் அது அவரை பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வைத்திருக்காது. ரஜினியின் கருத்து ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அது என்ன மாதிரியான தாக்கமாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. 1996ம் ஆண்டு ரஜினி நேரடி அரசியல் செய்தார், இப்போது அப்படி இல்லை” என்றும் சோ தெரிவித்திருந்தார். மறைமுகமாக ரஜினி ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது ரசிகர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பாளர்கள் என்று அரசியல் ஆய்வாளரும், துக்ளக் ஆசிரியருமான சோ அவர்களே நம்பிய நிலையிலும் கூட, அந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. அந்த தேர்தலில் ரஜினியின் குரலுக்கு கூட மக்கள் செவி சாய்க்கவில்லை என்பதே தேர்தல் முடிவாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, ரஜினியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, தேர்தலில் தனக்கான ஆதரவை கேட்டார். ஆனால் அரசியல் ரீதியிலான ஆதரவை தர ரஜினி மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இத்தகைய சூழலில் தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த அப்போதைய முதல்வரான செல்வி. ஜெ.ஜெயலலிதா 2016ம் ஆண்டு செப்சிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து பழம்பெரும் அரசியல்வாதியாக 50 ஆண்டு கால திராவிட அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் உடல்நலக்குறைவால் காலமானார். இருபெரும் தலைவர்களின் மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி, மாற்றம் ஏற்படுத்தவே ரஜினி விரும்பினார். ஆனால் இந்த முறை ரஜினிக்கு, அவருடைய நண்பர் சோ ராமசாமி இல்லாதது ஒரு பெரும் குறையாகவே மாறிவிட்டது. ஜெயலலிதா மறைந்த அடுத்த நாளே, உடல்நலக்குறைவு காரணமாக சோ ராமசாமியும் காலமானார். இதை பயன்படுத்தி, ரஜினிக்கு அவ்வப்போது ஆலோசனைகளை துக்ளக் ஆசிரியரான குருமூர்த்தி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.

ரஜினி வருகையால் அதிமுக காணாமல் போகும், திமுக வெற்றி வாய்ப்பை இழக்கும் என்று பல்வேறு அரசியல் நிபுணர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டது. பலர் ரஜினி கட்சியை ஜனவரியில் தொடங்கி, ஏப்ரலில் ஆட்சி அமைத்துவிடுவார் என்று கூறினர். ஆனால் எங்கள் அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் அக்டோபர் 10ம் தேதி வரை எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளில், ரஜினிக்கு வெறும் 02.26 சதவீத ஆதரவு மட்டுமே மக்களிடமிருந்து கிடைத்தது. எங்கள் அமைப்பு இந்த ஒன்றரை மாத காலத்தில், தொகுதிக்கு 500 வாக்காளர்கள் வீதம் மொத்தம் 1.17 லட்சம் வாக்காளர்களை சந்தித்து கணிப்புகளை மேற்கொண்டது. இதற்காக கேரளாவில் உள்ள மகாராஜா கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலருடன், மருத்துவர்கள், பேராசியர்கள், தனியார் கலைக்கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவர்களும் களத்தில் பொதுமக்களை சந்தித்தனர். வட தமிழகத்தில் 2.41% ஆதரவும், கொங்கு மண்டலத்தில் 2.20% ஆதரவும் பெற்ற ரஜினிகாந்த், டெல்டா மாவட்டங்களில் 2.36% ஆதரவையும், தென் மண்டலத்தில் 2.07% ஆதரவையும் மட்டுமே பெற்றிருந்தார். இதில் அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 4.02% ஆதரவை ரஜினி பெற்றிருந்தார். அதற்கு அடுத்தபடியாக மதுரையில் 3.94% ஆதரவையும், சென்னையில் 3.65% ஆதரவையும் ரஜினிகாந்த் பெற்றிருந்தார். எழுச்சி உண்டான பின் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி அறிவித்த பின்னர் எடுக்கப்பட்ட இக்கணிப்புகளில், ரஜினி எதிர்பார்த்த எழுச்சி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் டிசம்பர் 3ம் தேதி அவசர அவசரமாக கட்சி தொடங்குவது உறுதி என்று அறிவித்தார் ரஜினி. இதற்கு பின்னால் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக பலரால் பார்க்கப்பட்டாலும், துக்ளக் குருமூர்த்தி ரஜினிக்கு கடும் அழுத்தம் கொடுத்தார் என்கிறது ரஜினியின் குடும்ப வட்டாரம். தேவையில்லாமல் அரசியலில் இறங்க நினைத்து தான் மாட்டிக்கொண்டு இருப்பதாக ரஜினி எண்ணியதாகவும், அதேநேரம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு வாக்கு கொடுத்துவிட்ட காரணத்தால், வேறு வழியின்றி தனக்கு வந்த அழுத்தங்களை சமாளித்து, கட்சி தொடங்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டார் என்றும் அவரது குடும்ப வட்டாரம் தெரிவிக்கிறது.

தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை. இது உறுதியாகிவிட்டது. இந்த அறிவிப்பு யாருக்கு சாதகம் ? என்கிற கேள்வி தான் தற்போது பலருக்குள்ளும் இருக்கும் கேள்வியாக உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் அறிவிப்பு, திமுகவின் வெற்றியை தான் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டதே தவிர, திமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று யாராலும் கணிக்கப்படவில்லை. ஆதேநேரம், ரஜினியின் வருகையால், அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்றும், அதிமுக இருக்கும் இடம் தெரியாமல் போகலாம் என்றும் பலரால் கணிக்கப்பட்டது. உண்மையும் அதுதான். கள நிலவரத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருந்தால், அதிமுகவில் தற்போது அமைச்சர் பதவியில் உள்ள ஏழுக்கும் மேற்பட்ட நபர்கள், கட்சி பொறுப்புகளில் உள்ள பலர், முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் என பலரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ள தயாராகவே இருந்தனர். அதற்கு காரணம், அதிமுகவில் வலிமையான தலைவர் இருப்பதாக யாருக்கும் தோன்றவில்லை. ஒற்றைத் தலைமை ஏற்பட்டால் மட்டுமே அதிமுக வலிமை அடையும் என்று பல அரசியல் விமர்சகர்கள், அதிமுக தொண்டர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த ஒற்றைத் தலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தமிழகத்தில் இருந்து பாஜகவுக்கு வலுசேர்க்கக் கூடிய வேலைகளை செய்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கவனமாக இருந்தார் என்றே சொல்ல வேண்டும். சசிகலா தலைமை ஏற்றவுடன், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கவே சசிகலா விரும்பினார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களிலேயே, கட்சியின் கட்டுப்பாடு சசிகலா வசம் சென்றதை கண்கூடாக பார்க்க முடிந்தது. ஜெயலலிதா இருந்த வரை பாஜகவை வெளிப்படையாக அதிமுக எதிர்த்தது கூட இல்லை. ஆனால் பண மதிப்பிழப்பு உட்பட பல்வேறு விவகாரத்தில் காங்கிரஸ் உடன் இணைந்து அதிமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2019 மார்ச் மாதம் காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தை முடக்கிய அதிமுக எம்.பிக்கள், நவம்பரில் காங்கிரஸ் உடன் இணைந்து போராடினர். அப்போதே அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்பதை உணர முடிந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை சந்திக்க பிரதமர் மோடி நேரம் ஒதுக்கியும் கூட, பிரதமரை சந்திப்பதை தவிற்கும் படி சசிகலாவுக்கு டிடிவி தினகரன் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே ராகுல் காந்திக்கு எட்டு பக்கத்திற்கு சசிகலா நன்றி கூறி கடிதம் எழுதினார் என்று அவரின் சகோதரர் திவாகரனே குற்றம்சாட்டி இருந்தார்.

அதிமுகவில் பிளவை ஏற்படுத்தி, அதன் மூலம் பாஜகவை வளர்த்துவிடலாம் என்கிற எண்ணத்தில், அப்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிய அந்த மூத்த பத்திரிக்கையாளர், சசிகலாவை எதிர்த்து காய்களை நகர்த்திட, ஒரு கட்டத்தில் முதலமைச்சராக சசிகலா பதவியேற்க உள்ளார் என்றவுடன், அவசர அவசரமாக டில்லிக்கு தகவல் அனுப்ப, பல மாதங்களாக மூடப்பட்டு கிடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் ஊர் அறிந்த உண்மை. சசிகலா சிறை செல்ல, தினகரன் மீது கணக்கற்ற வழக்குகள் பதிவாக, வழக்கிற்கு பயந்து அவரை ஒதுக்கி வைத்து, ஆட்சியை நடத்துவது என அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் தீர்மானித்தனர். இதை பயன்படுத்தி, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைத்து, அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அமர்த்தி அழகு பார்த்துள்ளார் அந்த மூத்த பத்திரிக்கையாளர்.

தற்போது இரட்டை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இருப்பதால், கட்சிக்கு வலுவான தலைமை இல்லை என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, அதிமுகவின் பலத்தை குறைக்கும் போது, தானாகவே அதிமுகவில் இருந்து Soft-Hindutva வாக்காளர்கள் பாஜக பக்கம் வந்துவிடுவார்கள் என்பதே அவரின் கணக்காக இருந்தது. ஆனால் பாஜகவுக்கு வர அதிமுகவினர் தயங்கியதாலேயே, ரஜினியை பயன்படுத்தி, அவர் மூலமாக அதிமுகவை பலவீனப்படுத்த அந்த மூத்த பத்திரிக்கையாளர் திட்டமிட்டிருந்தார். அந்த திட்டத்திற்கு தான் தற்போது ரஜினிகாந்த் முற்றுப்பிள்ளி வைத்திருக்கிறார். இதன் மூலம் அதிமுக தப்பித்திருக்கிறது. அதேநேரம், ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பால் அதிகம் குஷியடைந்து இருப்பது திமுக தான். ஏனெனில் அரசுக்கு எதிரான வாக்குகளை பிரிப்பதோடு, அதிமுக தரப்பு வாக்குகளையும் ரஜினிகாந்த் பிளவுப்படுத்துவதால், பல தொகுதிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் முடிவுகள் பாதிக்கப்படலாம் என்று திமுக அச்சம் கொண்டிருந்தது. அதற்காகவே பிரஷாந்த் கிஷோர் தரப்பில் முன்னதாகவே பிரச்சாரத்தை தொடங்கிடவும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தவும் திட்டம் வகுக்கப்பட்டது. தற்போது ரஜினி அரசியலுக்கு வரப்போவது இல்லை என்கிற அறிவிப்பு, களத்தில் திமுக – அதிமுக இடையே தான் போட்டி என்கிற நிலையை உறுதி செய்திருக்கிறது. அதேநேரம் அரசுக்கு எதிரான வாக்குகள் 90% திமுகவுக்கே முழுமையாக கிடைக்கும் என்கிற நம்பிக்கையையும் அக்கட்சிக்கு ரஜினியின் அறிவிப்பு உண்டாக்கியிருக்கிறது.

என்னதான் திமுகவுக்கு இது மகிழ்ச்சியை கொடுத்தாலும், உண்மையில் பலன் அடைவது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியாக தான் இருக்கும். ஏனெனில் அவருக்கு எதிராக பலம் பொருந்திய முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் மட்டுமே இருப்பார். அத்தோடு களத்தில் அதிமுக vs திமுக என்கிற நிலையே இருக்கும் என்பதால், களத்தில் இருந்து காணாமல் போக வாய்ப்பு இருப்பதாக பலராலும் கருதப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ரஜினியின் அறிவிப்பு நிம்மதியை கொடுத்திருக்கும் எனலாம்.

மொத்தத்தில் ரஜினியின் பின்வாங்கல் காரணமாக, அதிமுகவே லாபம் அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதேநேரம், பலம் பொருந்திய திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியுடன் அதிமுக களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியிருப்பது, திமுகவுக்கு இரு மடங்கு சந்தோஷத்தை அளிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தற்போது ரஜினியிடம் ஆதரவு வாங்க பாஜக முற்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. ரஜினி பாஜகவுக்கு 2004ம் ஆண்டு போல மறைமுக ஆதரவு அளிக்கவே அதிக வாய்ப்புள்ளது. அதேநேரம், நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல், சமூக வலைதளம் வாயிலாகவே அதை அவர் வெளிப்படுத்துவார் என்றே தெரிகிறது. ஒருவேளை அவர் மறைமுகமாக அதிமுக – பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால், நிச்சயம் அவரது ரசிகர்களின் வாக்குகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு விழாது. ஏனெனில் மாற்றத்தை மட்டுமே எதிர்பார்த்த ரசிகன், மீண்டும் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க விரும்பமாட்டான். இதன் காரணமாக தற்போது தேர்தல் களத்தில் திமுக கையே ஓங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.

For Feedbacks: Editor@mcvnetwork.in

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *