MCV NETWORK

Tamilnadu's Best Political Advocacy Group

எடப்பாடி பழனிச்சாமியின் டில்லி பயணம்; சசிகலா விடுதலை: எதை நோக்கி பயணிக்கிறது தமிழக தேர்தல் களம் ?

36 min read

தமிழக அரசியலில் உற்று நோக்கும் விதமாக அமைந்திருக்கும் இரு விஷயங்கள், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டில்லி பயணமும், சசிகலாவின் விடுதலையும் தான். டிசம்பர் 18ம் தேதி டில்லிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அன்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேசப்பட்டதோடு, தங்களுக்கு குறைந்தபட்சம் 30 தொகுதிகள் முதல் 40 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்றும் அமித்ஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. அத்தோடு தென் மண்டல பொறுப்பாளர் ஒருவரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பிளவுப் படுத்தும் என்பதால், சசிகலாவை அதிமுகவில் இணைத்து, தினகரனை டில்லிக்கு தேர்ந்தெடுத்து அனுப்புவதாக வாக்குறுதி அளித்து, அவருடனும் சமரசமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதற்கு எல்லாம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்கிறது டில்லி வட்டாரம்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக எம்.பி ஒருவர், தானும் டில்லியில் முதல்வரை வரவேற்றதாக கூறியதோடு, அந்த சந்திப்பிற்கு முன்னதாக தங்களுடன் முதல்வர் ஆலோசித்ததாக தெரிவித்தார். அப்போது அதிமுகவிற்குள் சசிகலாவை கொண்டுவர பாஜக விரும்புவதாகவும், அதற்காக சிலர் டில்லியில் இருந்து காய் நகர்த்துவதாகவும், கட்சியில் உள்ள சிலரே அதற்கு உதவுவதாகவும் முதல்வர் தெரிவித்ததாக கூறினார். மேலும், எம்.பிக்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் முடிவை ஒட்டியே எம்.பிக்கள் செயல்பட வேண்டும் என்று கூறியதோடு, கூட்டணி விவகாரங்களை பொறுத்தவரை என்ன மாதிரியான பேச்சுக்கள் அடிபடுகிறது என்றும் கேட்டறிந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சுமார் ஒன்றரை மணி நேரம் கூட்டணி குறித்தும், சசிகலா விடுதலை குறித்தும் பேசியிருக்கிறார். அந்த சந்திப்பின் போது, சசிகலா வெளியே வருகிறார் என்கிற செய்த வந்த முதலே கட்சியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட தொடங்கிவிட்டன. அவரது விடுதலை நாள் உறுதியானால், நிச்சயம் தன்னுடன் இருக்கும் அமைச்சர்களில் சிலரே அணி மாறுவார்கள் என்று முதல்வர் வருத்தப்பட்டதாக தகவல் உள்ளது. அப்போது குறுக்கிட்ட அமித்ஷா, பாஜக தென் மாவட்டங்களில் 6 தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக கூறியதோடு, இந்த 6 தொகுதிகளிலும் அமமுகவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருப்பதாக தனக்கு தென் மண்டல நிர்வாகிகள் தரப்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள ரிப்போர்ட் கூறுவதால், சசிகலாவையும், தினகரனையும் ஏன் அதிமுகவில் இணைக்க கூடாது ? என்று கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு சசிகலா அதிமுகவில் இணைக்கப்பட்டால், கொங்கு மண்டலத்தில் தற்போது தனக்கு உள்ள செல்வாக்கும், கட்சிக்கான செல்வாக்கும் குறைந்துவிடும் என்றும், சசிகலாவையும், தினகரனையும் கட்சி தொண்டர்கள் விரும்பவில்லை என்றும் கூறியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அதேநேரம் இந்த டாப்பிக்கை வேறு விதமாக அமித்ஷா பேசத் தொடங்கினாராம். சசிகலாவை அதிமுகவில் இணைத்துவிட்டு, தினகரனுக்கு ராஜ்யசபை சீட்டு உறுதி செய்துவிட்டு, தேர்தல் முடியும் வரை தினகரனை அமைதிக் காக்க வைக்கலாம் என்று பேசப்பட்டதாம். ஆனால் அதற்கு கூட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விரும்பவில்லை என்றும், தன் சமூக மக்களே இவர்களை இணைத்தால், தன்னை மதிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் சசிகலாவின் வருகையை தேர்தல் வரை தள்ளிப்போட முடியுமா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேட்டதாகவும், அதற்கு வாய்ப்பில்லை என்றும், அது இன்னும் அரசியலில் பெரிய இமேஜை அவருக்கு கொடுக்கும் என்றும் டில்லி மேலிடம் தெரிவித்துவிட்டதாம். இதே டாபிக் அடுத்த நாள் காலை, பிரதமர் மோடியுடனும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. கடைசியாக இணைப்புக்கு முடிந்த அளவு கட்சியினருடன் பேசிப்பாருங்கள், முடிந்தால் இணைந்து தேர்தலை சந்திப்போம் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் பிரதமர் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சசிகலாவை அதிமுகவில் இணைக்க 100% வாய்ப்பில்லை என்று தெரிவித்ததோடு, ஜெயலலிதா இருந்த வரை கட்சியில் தினகரன் இல்லை என்றும் கூறி, தன் நிலைபாட்டை உறுதியாக எடுத்துவைத்தார்.

ஒருபக்கம் நிலை இப்படி இருக்க, சசிகலா 27ம் தேதி விடுதலையாவார் என்று உறுதி செய்து, அவரது வழக்கறிஞரான ராஜசெந்தூர பாண்டியனுக்கு ஈ-மெயில் அனுப்பியது சிறை நிர்வாகம். சசிகலாவின் விடுதலையை தள்ளிவைக்க வாய்ப்பில்லை, டில்லி பயணத்தில் முடிவு எட்டப்படவில்லை என்பதோடு, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் வர மறுப்பு தெரிவித்ததும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த, சசிகலா விடுதலையாகும் அன்றைய தினமே காலை 11 மணிக்கு நினைவிட திறப்பு விழாவை நடத்துவது என்று முடிவெடுத்து அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

இப்படிப்பட்ட சூழலில் தான் தற்போது சசிகலாவுக்கு உடல்நிலை மோசமாகி, அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சசிகலா விடுதலை செய்யப்பட்டாலும், அடுத்த 3 நாட்களுக்கு மருத்துவமனையில் தான் இருக்கப்போகிறார்.

சசிகலாவின் வருகை என்ன மாதிரியான மாற்றத்தை தமிழக அரசியலில் ஏற்படுத்தும் ? இந்த கேள்வி எல்லோர் மனதில் எழுந்துள்ள ஒரு கேள்வி என்றே சொல்ல வேண்டும். சசிகலாவின் வருகை ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றிப்போட்டுவிடாது என்றாலும் கூட, தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத்தின் பெரும்பான்மை சமூகத்தினராக முக்குலத்தோர் சமூகத்தினர் இருந்து வருகின்றனர். அதிமுக எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதிமுகவின் வாக்குவங்கியில் முக்கிய இடமும், முதலிடமும் பிடித்திருப்பது முக்குலத்தோர் வாக்கு வங்கி தான். அந்த முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும்.

இந்த சாதிய அரசியல் பற்றி தெளிவாக தெரிய வேண்டும் எனில் நீங்கள் தென் மாவட்டங்களில் பிறந்தவராக இருக்க வேண்டும் அல்லது தென் மாவட்டங்களை பற்றி நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும். ஏனெனில் அதிமுகவுக்கு எதிராக தினகரன் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரும் தோற்றிருக்கிறார்கள். பிறகு எப்படி அந்த சமூகம் தினகரனை ஏற்றதாக சொல்ல முடியும் என்கிற ஒரு கேள்வியை எல்லோரும் கேட்கக்கூடும். உண்மையில் அந்த சமூகம் தினகரனை ஆதரிக்காமல் இல்லை. ஆதரித்துள்ளது தான். 19 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் சுயேட்சைகளாக களம் கண்டனர் தினகரன் அணியினர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியில் 26,338 வாக்குகளையும், ஆண்டிப்பட்டி தொகுதியில் 28,313 வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதாவது பெரியகுளம் மற்றும் ஆண்டிப்பட்டியில் தலா 13% வாக்குகளை தினகரன் அணியினர் பெற்றுள்ளனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் 13% வாக்குகளை பெற்றுள்ள இவர்கள், மானாமதுரை, தஞ்சை மற்றும் திருவாரூர் தொகுதிகளில் 10% வாக்குகளை பெற்றுள்ளார்கள். இப்படி போட்டியிட்ட தென்மாவட்ட தொகுதிகளிலும், டெல்டா மாவட்ட தொகுதிகளிலும் 10 முதல் 15 சதவீத வாக்குகள் வரை பெற்றிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க நாடாளுமன்ற தேர்தலின் போது சுயேட்சைகளாக களம் கண்ட தினகரன் அணியினர், திண்டுக்கல் தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 5%, சிவகங்கையில் 11%, மதுரையில் 8%, ராமநாதபுரத்தில் 13%, தென்காசியில் 8%, தேனியில் 12%, தூத்துக்குடியில் 7%, திருநெல்வேலியில் 6%, விருதுநகரில் 10% என்று தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட அளவிலான வாக்குகளையும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில் 9%, நாகையில் 7%, மயிலாடுதுறையில் 6%, சிதம்பரத்தில் 5% என்று கணிசமான வாக்குகளையும் குவித்துள்ளனர். மொத்தமாக நாடாளுமன்ற தேர்தலில் 5% வாக்குகளும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 8% வாக்குகளையும் தினகரன் தரப்பு பெற்றிருந்தது. கணிசமான அளவில் வாக்குகளை பெற்றிருந்தாலும், தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தால் எங்கும் வெற்றிப்பெற இயலவில்லை. ஆனால் பல தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை அக்கட்சியின் வேட்பாளர்கள் மாற்றியிருக்கிறார்கள் என்பதே கள எதார்த்தமாக இருந்தது. சட்டப்பேரவை இடைத்தேர்தலின் போது திருப்பரங்குன்றம், ஆண்டிப்பட்டி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது அமமுக. அதேபோல அரூர், மானாமதுரை, சூளூர் மற்றும் சாத்தூர் தொகுதிகளில் திமுகவின் வெற்றி வாய்ப்பை பறித்தது அமமுக.

தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பல்வேறு அரசியல் பிரமுகர்களையும், அரசியல் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பதிவுப்பெற்ற கட்சி என்பதால், அமமுகவுக்கு முன்னதாகவே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறினாலும், இதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஒருபுறம் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்க, மற்றொரு புறம் சசிகலா விடுதலையானது என்பது அமமுகவுக்கு கூடுதல் பலம் தரும் என்றே சொல்ல வேண்டும். தினகரனை பொருத்தவரை ஆர்.கே நகரில் தன்னை வெற்றிப் பெற வைத்த சின்னம் குக்கர் என்பதால், அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்பதையும் அவர் நன்கு அறிந்து வைத்திருப்பார். இன்னொரு புறம் சசிகலா சிறையில் இருந்து வெளிவந்த உடன் தினகரனை ஆதரிப்பாரா அல்லது அதிமுகவில் இணைவாரா என்கிற குழப்பத்தில், அதிமுக ஆதரவிலும், திமுக ஆதரவிலும் தொடரும் முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த சசிகலாவின் ஆதரவாளர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிவிப்பால், தற்போது அமமுகவில் தான் சசிகலா இணைவார் என்பதை உறுதி செய்திருப்பார்கள். அதனாலேயே தற்போது கூடுதல் வாக்குகளை அமமுக பெறக்கூடும். அதிமுகவில் இன்றைக்கு எம்.எல்.ஏக்களாக உள்ள 90% பேர் சசிகலாவால் தான் பரிந்துரைக்கப்பட்டார்கள் என்று அமமுகவினர் கூறினாலும், அதில் குறைந்தபட்சம் 40% பேர் சசிகலா பக்கம் வந்தால் கூட, முக்கிய தலைவர்களின் ஆதரவு நிலைபாடு மாறுபடும். கூட்டணி கட்சியான கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக்கும், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு தென் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் 5,000 முதல் 10,000 வரையிலான வாக்குகள், அமமுகவுக்கு ஆதரவாக மாறும் பட்சத்தில், சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரி, அதிமுகவை மட்டுமல்லாது, திமுகவுக்கும் கூட சவாலான வகையிலேயே இருக்கும் எனலாம்.

அதனால் தான் தேவை ஏற்படும் எனில், சசிகலாவை அதிமுகவுடன் இணைப்பது தவறில்லை என்று பாஜக நினைப்பதாக தெரிகிறது. அதேநேரம் தன்னை 4 ஆண்டுகளில் தனித்துவம் கொண்ட தலைவராக நிலைநிறுத்த கடும் முயற்சிகள் மேற்கொண்டு, அதில் பாதி கிணறு தாண்டியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சசிகலா வந்தால் தன்னுடைய இடத்திற்கு ஆபத்து வரும் என்று அஞ்சுவதால், அதிமுக கூட்டணியை உறுதி செய்யாமல் தொடர்ந்து பாஜக இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் ரஜினிகாந்தின் வருகைக்காக காத்திருந்த பாஜக, இப்போது சசிகலாவின் இணைப்புக்காக காத்திருக்கிறது. இணைப்பு நடக்காத பட்சத்தில், நாடாளுமன்ற எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மாநிலங்களவையில் கூடுதல் எம்.பிக்கள் கொண்ட கட்சியுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியையோ அல்லது வெளியிலிருந்து ஆதரவு தரும் வண்ணமோ பாஜக திட்டமிட்டு காய் நகர்த்திடும் என்கிறார்கள் டில்லி மேலிட தலைவர்கள்.

அதேநேரம் வென்றால் முதல்வர், தோற்றால் எம்.எல்.ஏவாக தொடர்வது என்கிற முடிவோடும், மத்திய கூட்டணி மூலம் தன் மீது திமுக போட நினைக்கும் வழக்குகளை கிடப்பில் போட வைத்துவிடலாம் என்றும் கணக்கு போட்டு, காய்களை நகர்த்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளன. 3 மாதங்களில் 300 மாற்றங்கள் கூட நிகழலாம். அரசியலை பொறுத்தவரை 1 நாள் என்பதே மாற்றத்திற்கு அதிகப்படியான நேரம் என்பதால், எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், தமிழக அரசியல் களம் கூடுதல் சுவாரஸ்யத்துடன் தான் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.