MCV NETWORK

Tamilnadu's Best Political Advocacy Group

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி: மத்திய பிரதேசம், உத்திரகாண்ட், கேரள, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு நன்றி

21 min read

கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து, அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு, அவர்களுக்கான இழப்பீடுகளை அளிப்பதாகவும், மாத உதவித்தொகை அளிப்பதாகவும் அறிவித்துள்ள மத்திய பிரதேசம், உத்திரகாண்ட், கேரள, தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு எங்கள் அமைப்பு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வரும் சூழலில், அக்குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உதவிட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக மே 26ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இராணி, நாட்டில் பல்வேறு குழந்தைகள் தங்களின் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர் என்றும், அவர்களுக்கு உதவிடுவது அரசின் கடமை என்றும் கூறியிருந்தார். மேலும் பல்வேறு மாநில அரசுகளுடன் இது தொடர்பாக மத்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஏற்கனவே மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று நாட்டிலேயே முதல் மாநிலமாக மத்திய பிரதேச பாஜக அரசு கடந்த மே 13ம் தேதி, கொரோனாவால் உயிரிழந்த குழந்தைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் அரசே பார்த்துக் கொள்ளும் என்று அறிவித்திருந்தது. அவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மாநிலத்தின் குழந்தைகள் என்று கூறிய அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதோடு, ரேஷன் பெற தகுதி பெறாவிட்டாலும், அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் தனித் தனியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அத்தோடு மாதாந்திர உதவித்தொகையாக அக்குழந்தைகளுக்கு ரூ. 5,000 வழங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் அறிவித்திருந்தார்.

மத்திய பிரதேச அரசை தொடர்ந்து டில்லி ஆம் ஆத்மி அரசு கடந்த மே 14ம் தேதி கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்விக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தது. இது தொடர்பாக பேட்டி அளித்த டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “உங்களை நீங்களே அனாதை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். உங்களுக்காக நான் இன்னமும் இருக்கிறேன். இத்தகைய சூழலில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்விக்கான செலவை முழுவதுமாக அரசே ஏற்கும்” என்று அறிவித்திருந்தார்.

டில்லி அரசை தொடர்ந்து கடந்த மே 17ம் தேதி ஓடிசா மாநில பி.ஜூ ஜனதாதள அரசும், மதுபாபு உதவித்தொகை திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்படுவதோடு, இலவச கல்வியும் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த மே 20ம் தேதி மனிப்பூர் மாநிலத்தில் பெற்றோர்களை கொரோனாவுக்கு பறிகொடுத்த குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை ஏற்பதாக அம்மாநில பாஜக அரசும் அறிவித்தது. 18 வயதை அக்குழந்தைகள் பூர்த்தியடையும் வரை அவர்களுக்கான கல்வி, உணவு, இருப்பிடம் என எல்லாமே இலவசமாக வழங்கப்படும் என்றும், அவ்வாறான குழந்தைகளை யாரேனும் கண்டறிந்தால் உடனடியாக அரசுக்கு தெரிவிக்கலாம் என்றும் கூறி, ஒரு அவசர தொலைப்பேசி எண்ணையும் அம்மாநில முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்திருந்தார்.

பின்னர் மே 22ம் தேதி உத்திரகாண்ட் மாநில பாஜக அரசும் இதுபோன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மற்ற மாநிலங்களை விட ஒருபடி மேலே சென்று, அக்குழந்தைகள் 21 வயது பூர்த்தியடையும் வரை, அரசு செலவிலேயே அவர்களுக்கு இலவச கல்வி, உணவு, இருப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. முதலமைச்சர் வத்சல்ய யோஜனா திட்டத்தின் கீழ் அக்குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ. 3000 வழங்கப்படும் என்றும், 21 வயதை அவர்கள் பூர்த்தியடைந்த பின்னர், முன்னுரிமை அடிப்படையில் 5% இட ஒதுக்கீட்டுடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் தீரத் சிங் ராவத் தெரிவித்திருந்தார். மேலும் அத்தகைய குழந்தைகளின் பெற்றோர் சம்பாதித்துள்ள சொத்துக்கள் அக்குழந்தைகள் மேஜர் ஆகி, அவர்களிடமே சென்றடையும் வரை, அதை விற்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் உத்தரவிட்டுள்ள அம்மாநில அரசு, குடும்பத்தில் ஊதியம் பெறும் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் மாதம் ரூ. 3000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரள இடதுசாரிகள் அரசு தரப்பில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், ”ஒருமுறை இழப்பீடு திட்டமாக பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ரூ. 3 லட்சம் வழங்கப்படும். 18 வயதை பூர்த்தயடையும் வரை அக்குழந்தைகளுக்கு ரூ. 2000 வழங்கப்படும். அதை தாண்டி, அக்குழந்தைகளின் கல்விக்கான செலவை முழுவதுமாக அரசே ஏற்றுக்கொள்ளும்” என்று அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தற்போது தமிழக திமுக அரசும் இதுபோன்ற அறிவிப்பை இன்றைக்கு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டு, அவை வைப்பீடு தொகையாக பாதுகாக்கப்படும். 18 வயதை அக்குழந்தைகள் பூர்த்தியடையும் போது, அத்தொகை வட்டியோடு அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தங்கும் இடம், உணவு அரசு செலவில் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையில் அக்குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும். கொரோனாவினால் தாய் அல்லது தந்தை என இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும். அரசு இல்லங்களில், விடுதிகளில் அல்லாமல் உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆதரவில் வளரும் குழந்தைகளுக்கு, அவர்கள் 18 வயதை பூர்த்தியடையும் வரை ரூ. 3000 உதவித்தொகையாக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், தற்போது கொரோனாவால் இன்னொரு பெற்றோரையும் இழக்க நேர்ந்தால், அக்குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு, அது அவர்களின் பெயரில் வைப்பீடு செய்யப்படும். கொரோனாவிற்கு பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைக்கும், அக்குழந்தையை பராமரித்து வரும் தாய்/தந்தைக்கு அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல கர்நாடக பாஜக அரசு, மஹாராஷ்டிர சிவசேனா அரசு, ஆந்திர பிரதேச ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசும் குழந்தைகளுக்கான இலவச கல்வி, இருப்பிடம், உணவு போன்றவற்றை உறுதி செய்வதாக அறிவித்துள்ளன. பல்வேறு மாநில அரசுகள் இதுபோன்ற திட்டங்களை அறிவிப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இதை பிற மாநில அரசுகளும் எவ்வித பாகுபாடும் காட்டாமல், அகங்காரம் காட்டாமல் அறிவிக்க வேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் வேண்டுகோளாக இருக்கிறது. அதேபோல மத்திய அரசும் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளுடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்திட வேண்டும் என்றும், மாநில அரசுகளுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசும் செய்திட வேண்டும் என்றும் எங்கள் அமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *